வாஷிங்டன்: காபூல் குண்டுவெடிப்பில் 13 அமெரிக்க வீரர்கள் மற்றும் 60 ஆப்கன் மக்கள் பலியானதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குண்டு வெடிப்பை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம், பயங்கரவாதி வேட்டையாடுவோம் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தற்கொலை பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 13 அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால், இதில் தாலிபான்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளதுடன், “இச்சம்பவத்தை நாங்கள் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. உங்களை வேட்டையாடி, உரிய விலையைத் தருவோம் என்று கூறியுள்ளனர். அமெரிக்க வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா அஞ்சப்போவதில்லை. எங்கள் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறும்.
அசாதாரண ஆபத்துகள் மற்றும் அபாயங்கள் இருந்தபோதிலும், ஒரு சில நாட்களில் 100,000 க்கும் அதிகமான மக்களை நாங்கள் வெளியேற்ற முடிந்தது. நம்மால் முடியும் – மற்றும் நாம் – நமது பணியை முடிக்க வேண்டும். நாங்கள் தீவிரவாதிகளால் தடுக்கப்பட மாட்டோம். எங்கள் பணியை நிறுத்த விடமாட்டோம். நாங்கள் வெளியேற்றத்தைத் தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.