சென்னை:
சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு உடனிருந்தனர்.
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்.,18 மற்றும் மே 19ல் வாக்குப்பதிவு நடைபெற்று மே 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில்., திமுக 13 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றியது. இதையடுத்து, தேர்வு பெற்ற 13 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகம் வந்தனர்.
தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம் சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் பலம் 101 ஆக உயர்ந்துள்ளது.