சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் த , 8.27 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான 2025–26 ஆம் கல்வியாண்டு பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 2) முதல் மார்ச் 26 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் மாநிலம் முழுவதும் உள்ள 3,412 தேர்வு மையங்களில் பள்ளி மாணவ, மாணவியர் 7,99,692 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் 27,783 பேர் என மொத்தம் 8,27,475 பேர் தேர்வெழுத உள்ளனர்.
அதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தாலும், முந்தைய ஆண்டுகளில் 11ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான (அரியர்) தேர்வு மார்ச் 3 முதல் மார்ச் 27 வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு 2,615 மையங்களில் நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் 19,107 பேரும், தனித்தேர்வர்கள் 5,944 பேரும் என மொத்தம் 25,051 பேர் தேர்வெழுதுகின்றனர். மேலும், மேல்நிலைப் பொதுத்தேர்வில் 281 சிறைவாசிகளும் கலந்து கொண்டு தேர்வெழுத உள்ளனர்.
பொதுத்தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் சுமார் 49,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற உள்ளனர். காப்பி அடித்தல், பிட் பேப்பர் பயன்படுத்துதல் போன்ற தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 4,540 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆள் மாறாட்டம், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், தூய குடிநீர் மற்றும் தேவையான சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையங்களை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு… 8.27 லட்சம் மாணவர்கள்… 3,412 மையங்கள் ரெடி!
ஒவ்வொரு தேர்வுக்கும் அறைக் கண்காணிப்பாளர்கள் காலை 8.45 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தங்களது செல்போன் அணைத்து விட்டு (Switch Off) முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் செல்போன் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்காமல், தேர்வறையில் அறைக் கண்காணிப்பாளர்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான துறை நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பாளர்கள் அடையாள அட்டையைக் கண்டிப்பாக அணிய வேண்டும். மாணவர்கள் தேர்வின் போது ஒழுங்கீனச் செயலலில் ஈடுப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதும் செயல்கள் கண்டுபிடிக்கப்படும் போது காவல்துறையினருக்கு உடனடியாக புகார் தெரிவித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]