மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வந்த கடும் மழையால் பல இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இநத பெரும் நிலச்சரிவுகளில் ஏராளமானோர் சிக்கியதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து கடும்மழை பெய்ததால், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. தேசிய பேரிடர் படை மீட்பு பணியில் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து வருகிறது.
மீட்பு பணிகளில் இந்திய ராணுவம் மற்றும் கடற்படையின் ஆறு அணிகள் ஈடுபட்டு வருகிறது. வெள்ளத்தால் 54 கிராமங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன, 821 பேர் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோலாப்பூர் மாவட்டத்தில் மட்டும் 40,882 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.
மேற்கு மகாராஷ்டிராவின் புனே பிரிவில் வெள்ளிக்கிழமை கோலாப்பூர் மாவட்டத்தில் 40,000 க்கும் மேற்பட்டோர் உட்பட 84,452 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மழை பெய்ததால், ஆறுகள் பெருகின. கோலாப்பூர் நகரத்திற்கு அருகிலுள்ள பஞ்ச்கங்கா நதி 2019 ஆம் ஆண்டில் வெள்ளத்தின் உச்சத்தின் போது கண்டதை விட உயர்ந்த மட்டத்தில் பாய்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.