ஈரோடு: கடந்த 3ஆண்டுகளில் 12,317 இதய நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனர், இதை எடப்பாடியிடம் சொல்லுங்கள் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும், வீட்டுவசத்தித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆகியோர் இன்று ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த அரேப்பாளையம் மைராடா வளாகத்தில் பழங்குடி மக்களுக்கான இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெரியார் மருத்துவர் அணி, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் திருச்சி அஸ்வமித்ரா புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை ஒருங்கிணைந்து தாளவாடி ஆசனூர் பகுதியில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது.
இப்பகுதியில் 118 கிராமங்கள் உள்ளன. இதில் 47 கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று நானும் அமைச்சர் முத்துசாமியும் ஸ்டேஷன் நகரில் ஒரு துணை சுகாதார நிலையம், தாளவாடியில் ஒரு பிணவறை கட்டிடம், உக்கரம் நகரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், புஞ்சை புளியம்பட்டியில் ஒரு செவிலியர் குடியிருப்பு, நம்பியூரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், திங்களூரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், பவானியில் மண் தொழிலாளர் பகுதியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் என ரூ.3 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 7 கட்டிடங்களை திறந்து வைத்துள்ளோம் என்றார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 1333 கட்டிடங்கள் புதிய கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையை பொறுத்தவரை 8 ஆயிரத்து 713 துணை சுகாதார நிலையங்கள், 2 ஆயிரத்து 286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கை வெயிட்டுள்ளார். அதில் 2023-ம் ஆண்டு தவறான சிகிச்சையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எலி மருந்துக்கு பதிலாக மாற்ற ஊசி போடப்பட்டது என கூறும் அவரிடம் போய் சொல்லுங்கள் என்றவர், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்து 317 பேர் இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மருத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார். இன்றுடன் அந்த திட்டத்தில் 2 கோடி பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். வரும் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2 கோடியாவது பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், திரு. M. K. Stalin தனது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.