ஸ்ரீநகர்: தீவிரவாதிகளால் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டு, அவனை மீட்கும் முயற்சியின்போது, அந்த தீவிரவாதிகளாலேயே 12 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம், காஷ்மீரில் துயரத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கியுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; வடக்கு காஷ்மீரில் இருப்பது பந்திப்போரா என்ற சிறிய நகரம். இங்கேயுள்ள ஆர்மி குட்வில் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன்தான் ஆத்திஃப் ஹுசேன் மிர்.
அச்சிறுவனை அவனது வீட்டிற்குள்ளேயே லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இருவர் பணயக் கைதியாக பிடித்துவைத்துக் கொண்டனர். அந்தச் சிறுவனை விட்டுவிடுமாறு பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் பலமுறை கேட்டுக்கொண்டும், அவனை வெளிவிட மறுத்த தீவிரவாதிகள், இறுதியில் அச்சிறுவனை கொலை செய்துவிட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் கோபம் அந்தக் குறிப்பிட்ட தீவிரவாதிகளின் மீது திரும்பியுள்ளது. பள்ளியில் சிறந்த மாணவன் என்று அறியப்பட்ட அந்த சிறுவனின் இறுதிச் சடங்கில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
– மதுரை மாயாண்டி