சிட்னி:

தாயுடன் ஏற்பட்ட சண்டையில் 12 வயது சிறுவன் இந்தோனேசியாவுக்கு சென்று பெற்றோர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி 4 நாட்கள் ஜாலியாக சுற்றிய சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா சிட்னியை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கும் அவனது தாயுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுவன் மேற்கு ஆஸ்திரேலியா நகரமான பெர்த்துக்கு பட்ஜெட் விமானமான ஜெட்ஸ்டாரில் சென்றான். பின்னர் அங்கிருந்து இந்தோனேசியா நாட்டின் பாலி தீவுக்கு விமானத்தில் பறந்து சென்றுள்ளான்.

அங்கு 4 நாட்கள் ஒரு ஓட்டலில் தங்கியுள்ளான். பின்னர் ஒரு ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துள்ளான். பீர் குடித்துள்ளான். அவன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த வீடியோவை நண்பனுக்கு அனுப்பியிருந்தான். அதை அந்த நண்பன் சிறுவனின் தாய் ஈமாவுக்கு அனுப்பியுள்ளான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஈமா இது குறித்து ஆஸ்திரேலியா போலீசில் புகார் அளித்தார்.

பின்னர் இந்தோனேசியா போலீசாரின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டான். பெற்றோர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியா சென்று சிறுவனை அழைத்து வந்தனர். சிறுவன் பெற்றோரின் கிரெடிட் கார்டை எடுத்து சென்று செலவழித்துள்ளான். மொத்தம் 6 ஆயிரத்து 100 அமெரிக்க டாலரை அவன் செலவு செய்துள்ளான்.

சிறுவனின் குடும்பத்தினர் ஏற்கனவே பாலி தீவுக்கு விடுமுறை பயணம் மேற்கொண்டுள்ளனர். அச்சிறுவன் ஏற்கனவே ஒரு முறை பாலி செல்ல முயன்றுள்ளான். ஆனால், அவனது தாய் ஈமாவின் ஒப்புதல் கடிதம் இல்லாததால் விமான நிறுவனத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்.

பொதுவாக ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களை தனியாக விமானத்தில் பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு துணையின்றி பயணம் செய்ய மைனர் டிக்கெட் வழங்கப்படும். 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் பெற்றோர் ஒப்புதல் கடிதத்துடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.