சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 18ந்தேதி அன்று, “ஒரே நாளில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன, இதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கி தலைகுனிய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ர்.
தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை முதல், ஏராளமான பள்ளி, கல்லூரிகளிலும், காவல்துறையில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கும் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் தினசரிவெளியாகி மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகி வருகிறது.
தமிழ்நாடு காவல்துறையினரால், பாலியல் குற்றச் சம்பவங்களை, போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பவங்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 18ந்தேதி) ஒரே நாளில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி யுள்ளதாக செய்திகள் வருகின்றன. சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவு இந்த ஆட்சியில் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது @mkstalin மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்.
இந்த ஸ்டாலின் மாடல் அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல், பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால், இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. இந்த ஆட்சியில் தமிழ்நாடு இப்படி சிக்கிச் சீரழிந்து வருவது குறித்து எந்தக் கவலையுமில்லாமல் ‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என பேசினால் மட்டும் போதுமா? இந்த ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது, இனியாவது பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.