சென்னை: தமிழகம் முழுவதும் 26ந்தேதி நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாமில் 12 மாவட்டங்களின் செயல்பாடுகள் மோசம் இருந்தது என்று தமிழக தலைமைச்செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதேவேளையில் தேனி, கோவை, திண்டுக்கல், திருவள்ளுர் மாவட்ட செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாக பாராட்டும் தெரிவித்து உள்ளார்.
நாம் ஒன்றாக சேர்ந்து நமது மாநிலத்தை தடுப்பூசி போடுவதில் முன்னணி மாநிலமாக மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஏற்கனவே 2 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், கடநத 26ந்தேதி 3வது மெகா தடுப்பூசி முகாமை நடத்தியது. மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் மையங்களில் ‘மெகா தடுப்பூசி’ போடப்பட்டது. அன்றைய தினம் 24.85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 15லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஏறக்குறைய 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகள் தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் வெகுசிறப்பாக நடைபெற்றது என்று பாராட்டு தெரிவித்து உள்ளார்.
அதே வேளையில், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 18 மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகள் திருப்தியாக இருந்ததாகவும், சிவகாசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மிகவும் மோசமாக இருந்தாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஒழுங்குபடுத்தி, விரைவுபடுத்த வேண்டும், தடுப்பூசி பற்றாக்குறை உள்பட வேறு ஏதேனும் சிரமங்கள் இருந்தால், அதை நீங்கள எனது கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று தெரிவித்துள்ளதுடன், நாம் ஒன்றாக சேர்ந்து நமது மாநிலத்தை தடுப்பூசி போடுவதில் முன்னணி மாநிலமாக மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.