சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில்  ஏர்இந்தியா நிறுவனத்தின் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.  விமான நிறுவன ஊழியர்களுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வானிலை நிலவரம், மற்றும் டெல்லி உள்பட பல மாநிலங்களில் நிலவும் அதிகப்படியான காற்று மாசு காரணமாக, உள்நாட்டு  விமான சேவைகள் அவ்வப்போது ரத்து செய்யப்பட்டு வருகின்றன.  சமீப நாட்களாக  சென்னை விமான நிலையத்தில்   முன்னறிவிப்பு இன்றி  திடீர் திடீரென விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.  இதனால், விமானத்தில் அவசர வெளியூர் செல்ல புக் செய்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக விமான நிறுவனங்கள் மீது ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். ஆனால்,  நிர்வாக காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனங்கள் கூறி வருகின்றன.

இந்த நிலையில், இன்று சென்னையில் இருந்து புறப்பட இருந்த சுமார் 12 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதாவது,  சென்னையில் இருந்து,   புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டனர். அதேபோல் 6 வருகை விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அனைத்துமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் எனபது குறிப்பிடத்தக்கது.