டெல்லி :  2020ம் ஆண்டிற்க்கான பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. பிரபல நடிகை கங்கனா ரனாத் உள்பட 119 பேருக்கு இந்த விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த  2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட 119 பேரின்  பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.  அதன்படி,  7 பத்மவிபூஷன் விருதுகளும், 10 பத்மபூஷன் விருதுகளும், 102 பத்மஸ்ரீ விருதுகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த விருது வழங்கும் விழா இன்று காலை டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில்  நடைபெற்றது. விருதுக்கு தேர்வானர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  விருதினை அரசு வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகை கங்கனா ரனாத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.  இதில் பேட்மிடன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.  மேலும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது மகள் பன்சுரி என்பவர் விருதினை பெற்றுக்கொண்டார்.