117 Indian athletes test positive for banned substances
இந்தியாவின் 117 வீரர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் (176 வீரர்கள்) ரஷ்யாவும், இரண்டாவது இடத்தில் இத்தாலியும் (129) உள்ளன. சர்வதேச போதைத் தடுப்பு ஏஜன்சி (World Anti-Doping Agency – WADA) நடத்திய ஆய்வில் இது அம்பலமாகி உள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், போதைப் பொருட்களை பயன்படுத்தும் விளையாட்டு வீர்ரகளைத் தண்டிப்பதற்கு தனியாக கிரிமினல் சட்டங்கள் தேவையில்லை என்றும், ஏற்கனவே நம்மிடம் அதற்குரிய கடுமையான பிரிவுகளைக் கொண்ட சட்டங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதுபோன்ற விவகாரங்களில் விளையாட்டு வீரர்கள் சிக்கிக் கொள்கிறார்களே தவிர, அவர்களை இத்தகைய பழக்கத்திற்கு ஆளாக்கும் பயிற்சியாளர்கள் சிலர் தப்பி விடுவதாகவும் கோயல் கூறியுள்ளார். பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோரது உதவியின்றி விளையாட்டு வீரர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை என்பதையும் அமைச்சர் கோயல் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, விளையாட்டு வீரர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்திய புகாரில் சிக்கினால், அதற்குக் காரணமான பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரையும் சிறைக்கு அனுப்பும் வகையில் சட்டத்திருத்தம் தேவைப்படுவதாக கோயல் குறிப்பிட்டுள்ளார். அதற்கு தகுந்தவாறு சட்டரீதியான மாற்றங்களைக் கொண்டுவருவது குறித்து சட்ட அமைச்சகத்துடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். எனினும், அதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கோயல் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்கள் பல சமயங்களில் தங்களை அறியாமலேயே இத்தகைய பழக்கங்களுக்கு ஆளாகி விடுவதாகவும், அதற்கு பயிற்சியாளர்களும், மருத்துவர்களுமே உதவியாக இருப்பதாகவும் குற்றம் சாட்டிய கோயல், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அளவிலான போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கும் இத்தகைய பழக்கங்கள் பரவிவிடக் கூடும் என்பதே தமது அச்சம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்களிடம் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக குத்துச்சண்டைப் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற மேரி கோம் கூறியுள்ளார்.