சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து 116 நாட்களில் 2 கோடியே 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட உள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ்நாட்டில் இன்றுமுதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியர், மாணவர்கள் மற்றும் இதர கல்லூரி பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழகம் முழுவதும் இதுவரை 3.5 கோடி பேருக்கு அரசின் சார்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 21.28 லட்சம் பேருக்கு தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, நேற்று ஒரே நாளில் மட்டும் 5.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழ்கம் முழுவதும் அதிகப்படியானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டது நேற்றுதான் என்றும் கூறியவர், அதிமுக 100 நாட்களில் போட்ட தடுப்பூசிகளை விட இரண்டு மடங்கு திமுக ஆட்சியின் 100 நாட்களில் போடப்பட்டு இருப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வந்து 116 நாட்காளில் 2 கோடியே 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்றும் கூறினார்.