பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி…
கொடூரமாகக் கொன்ற அரசு மருத்துவமனை…

கடந்த 26 ஆம் தேதி 11 வயது சிறுமி, 30 வயது இளைஞனால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கிடக்கிறார்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்த சிறுமியை முசாஃபர் நகர் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைக்கின்றனர்.
கொடூரத்தில் ஈடுபட்ட இளைஞன் ரோகித் சகானியையும் கைது செய்கின்றனர்.
வன்புணர்வு மற்றும் கடுமையான தாக்குதல் காரணமாக சிறுமியின் உடல்நிலை மோசமாய் கிடந்த நிலையில், முசாபர்பூர் அரசு மருத்துவமனை அவரைக் காப்பாற்ற கடுமையாக போராடியது.
இருப்பினும் உயர் சிகிச்சை அளித்தால் தான் சிறுமையை காப்பாற்ற முடியும் என்ற நிலை எட்டிய போது, அவர்கள் உடனே பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட சிறுமியை பாட்னா மருத்துவக் கல்லூரி உள்ளே அனுமதிக்கவே இல்லை.
காது மூக்கு தொண்டை பிரிவு நிபுணர்கள் கிடையாது என்பதால் இங்கு அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதனால் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலேயே ஆம்புலன்சில் சிறுமி துடித்துக் கொண்டிருந்தார்.
இன்னொரு பக்கம் ஆக்சிஜன் குறைந்து கொண்டே வருவதால் பதறிப்போன அவரின் உறவினர்கள் ஆக்சிஜன் சிலிண்டரை மாற்றுங்கள் என்று கூறினால், அதற்கும் 2000 ரூபாய் தாருங்கள் என்று மருத்துவமனை ஊழியர்கள் நிர்பந்தித்துள்ளனர்.
நான்கு மணி நேரம் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அட்மிஷன் போட முரண்டு பிடித்ததால், ஆம்புலன்சில் இருந்தபடியே துடிதுடித்து இறந்தார் 11 வயது சிறுமி.
சிறுமியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையே படுகொலை செய்துவிட்டது பிகாரில் இருக்கும் நிதீஷ்குமார் தலைமையிலான அரசு என்று இப்போது காங்கிரஸ் கட்சி கடுமையாக போராட ஆரம்பித்துள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சுமார் பத்து வயதுள்ள மூன்று சிறுமிகள் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் நிதீஷ் குமார் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமியை காப்பாற்ற கூட வக்கில்லாமல் ஆம்புலன்ஸிலேயே 4 மணி நேரம் காக்க வைத்து கொன்ற நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இப்போது நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
– செய்தி பிரிவு