சண்டிகர்:
பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.
கல்வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வன்முறை சம்பவங்களில் 200க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். மருத்துவமனையில் உள் செல்ல முடியாத அளவில் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை காணப்படுகிறது என தகவல்கள் கிடைத்துள்ளது.
11 பேர் வரை அரியானாவில் வன்முறையில் பலியாகி உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையானது அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் போலீஸ் அறிவுரை வழங்கி வருகிறது.
ஏற்கனவே வன்முறை ஏற்படலாம் என பாதுகாப்பு அண்டைய மாநிலங்களிலும் அதிகரிக்கப்பட்டது. இப்போது நிலையானது மோசமாகி உள்ளதால் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் எல்லையை கொண்டு உள்ள பகுதியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களிலும் குர்மீத் ராம் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களும் வன்முறையில் இறங்கலாம் என்ற பதற்றமானது அதிகரித்து உள்ளது. இருமாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் மேற்கு எல்லை மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, கண்காணிப்பு உஷார் படுத்தப்பட்டு வருகிறது.
உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். உயர் அதிகாரிகளிடம் இரு மாநிலங்களிலும் நிலையை கேட்டறிந்தார். வன்முறையானது பரவிய வண்ணமே உள்ளது. டில்லி எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.