டில்லி,

நாடு முழுவதும் சுமார் 11.44 லட்சம் போலி பான் கார்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கார்டுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

பாராளுமன்றத்தில் இதுகுறித்த விவாதத்தின்போது பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் இதை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் வருமான வரி செலுத்துபவர்கள்,  பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. அதற்கான காலக்கெடு ஜூலை 31ந்தேதியுடன் முடிவடைநதுள்ள நிலையில், மேலும் காலக்கெடுவை  இந்த மாதம் 30ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதில்அளித்த மத்திய அமைச்சர்,  பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது எனக்குறிப்பிட்டார்.

மேலும்,  ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பதை மீறி, ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தது தற்போது தெரிய வந்துள்ளது என்றும்,  ஜூலை 27-ஆம் தேதி கணக்கீட்டின்படி, போலி பான் கார்டுகள் மொத்தம் 11 லட்சத்து 44,211 அடையாளம் காணப்பட்டு, அவை அனைத்தும் முடக்கப்பட்டு,  நீக்கப்பட்டுள்ளன என்றார்.