ராமநாதபுரம்

மிழகத்துக்கு இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ 600 கிராம் தங்கத்தைக் கடலோரக் காவல் படை நீச்சல் வீரர்கள் மீட்டனர்.

.

மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு இலங்கையிலிருந்து 2 படகுகள் மூலம் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையொட்டி கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ரோந்து படகில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கடந்த 30-ம் தேதி பிற்பகல் மண்டபம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அவ்வழியாகப் பதிவு எண் இல்லாமல் வந்த பைபர் படகை விரட்டிபிடித்தனர். அப்படகிலிருந்த வேதாளை தெற்கு தெருவைச் சேர்ந்த முகமது நாசர், அப்துல் ஹமீது, தங்கச்சிமடம் வலசை தெருவைச் சேர்ந்த ரவிக்குமார்  ஆகியோரை மண்டபம் கடலோரக் காவல்படை முகாமுக்கு அழைத்து சென்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இவர்கள் மூவரும் இலங்கையிலிருந்து தங்கத்தைக் கடத்திக் கொண்டு வந்ததாகவும், அந்த பார்சலை மண்டபம் அருகே உள்ள மணலி தீவு கடலில் போட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து கடலோரக் காவல் படையின் நீச்சல் பிரிவு வீரர்கள் கடலில் தங்கத்தைத் தேடி வந்தனர்.  நேற்று அந்த பார்சலில் இருந்த 11 கிலோ 600 கிராம் தங்கத்தைக் கடலோரக் காவல்படையின் நீச்சல் பிரிவு வீரர்கள்  மீட்டனர்.