சென்னை:
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையை சேர்ந்த டிரெக்கிக் கிளப்பை தடை செய்ய வேண்டும் என்றும், அதன் நிறுவனரை கைது செய்ய வேண்டும் என நீலாங்கரையை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்கத்தை சேர்ந்த லிங்கபெருமாள் என்பவர் சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் டிரெக்கிங் கிளப்புக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், பீட்டர் வான் ஜியட் என்பவரை நிறுவனராகவும், இயக்குநராகவும் கொண்ட சென்னை ட்ரெக்கிங் கிளப் எந்த ஒரு சட்ட விதிகளையும் பின்பற்றாமல், சட்ட விரோதமாக இணையதளம் மூலம் ஏற்பாடு செய்து இருந்த காட்டுப் பயண ஏற்பட்டால், 9 பேர் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் உள்ளனர்.
வெளிநாட்டு நிறுவனமான சிஸ்கோ பின்னணியில் செயல்படும் பீட்டர் வான் ஜியட் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர். இவர் எந்த ஒரு சட்ட நடை முறைகளையும் பின்பற்றாமல் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த கிளப் தொடங்கப்பட்டதில் இருந்து இவர் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கி, இளம்பெண்களை யும்,இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் லட்சக்கணக்கில் செலவு செய்து சென்னை ட்ரெக்கிங் கிளப் இளையதளம் வடிவமைத்துள்ளார்.
இந்த நிறுவனத்தை நடத்தி வரும் பீட்டர் வான் ஜியட் குறித்தும், அவரது பின்னணி குறித்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப் செயல்படுவதற்கு வெளிநாட்டில் இருந்து சட்ட விரோத பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, பீட்டர் வான் ஜியட்டை கைது செய்ய வேண்டும் என்றும், சட்ட விரோதமாக ட்ரெக்கிங் நடத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் புகார் மனுவில் கூறி உள்ளார்.
மேலும், அவர் நடத்திவரும் டிரெக்கிக் கிளப்பில் ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 2012 நவம்பர் மாதம் இந்த நிறுவனம் மூலம் ட்ரெக்கிங் சென்ற ஐஐடி மாணவர் ஜே.சாய்சாம் உயிரிழந்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.