நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் அருகே உள்ள பனங்குடியில் சி பி சி எல் நிர்வாகத்தை கண்டித்து நந்த வந்து உண்ணா விரத போராட்டம் திரும்ப பெறப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூரை அடுத்த பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய பகுதிகளிலிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு 1கையகப்படுத்திய நிலத்துக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்காமல், சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த வெள்ளிகிழமை முதல் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்போடு நிலம் அளவிடும் பணிகள் தொடங்கி, எல்லை கற்கள் பதிக்கப்பட்டது. நேற்று கற்கள் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தியும், பதிக்கப்பட்ட கற்களை பிடுங்கி எறிந்தும் நரிமணம், பனங்குடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனால் போராட்டம் தீவிரமடைந்ததால்ல் நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் டிஎஸ்பி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில், வருகிற ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான மறுவாழ்வு மற்றும் மறுகுடி அமர்த்துதல் தொடர்பான பணிகள் முடிக்கப்படும் எனவும் இதுவரை போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் படிப்படியாக நீக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. எனவே போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு வழங்கப்பட்டு 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.