சென்னை: 9லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 10 ந்தேதி வெளியான நிலையில், இன்று (ஆகஸ்டு 29ந்தேதி) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 9லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு (எஸ்எஸ்எல்சி) மார்ச் 26 – ஏப்ரல் 8 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. பின்னர் மே 10ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், 91.55% சதவீதம் மாணவ மாணவிள் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றதாகவும் தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் மேல்நிலை கல்வி பயிலும் வகையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சுமார் மூன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் விநியோகிக்கப் படுகிறது. இன்று காலை 10 மணி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெறலாம். தனித்தேர்வர்கள், பொதுத்தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.