டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  1,096 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில், கொரோனா பொதுமுடக்கத்தில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் நிலையில், தொற்று பரவலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

கடந்த மாதம் தினசரி 60ஆயிரம் வரையில் தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், சமீப நாட்களாக 80ஆயிரத்தை தாண்டி பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஆறுதலான செய்தி, உயிரிழப்பு வெகுவாக தடுக்கப்பட்டு வருகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது.  இது மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்டுள்ள  கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,36,747 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,341 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும் 1,096 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68,472 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 66,659 பேர் தொற்று பாதிப்பில் இருந்து  குணமடைந்தத நிலையில், தற்போது,  8.31 லட்சம் பேருக்கு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.