சென்னை

மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் 1084 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்தில் அதிகளவில்  பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் வசதிக்காக, வருகிற 23-ம் தேதி(நாளை ) 682 சிறப்பு பேருந்துகளும், 24-ம் தேதி (நாளை மறுநாள்) 502 சிறப்புப் பேருந்துகளும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தால் இயக்கப்படவுள்ளது.

23-ம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 275 சிறப்புப் பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 40, புதுச்சேரியிலிருந்து 30, பெங்களூரிலிருந்து 20, வேலூரிலிருந்து 55, திருச்சியிலிருந்து 50, சேலத்திலிருந்து 50, ஓசூரிலிருந்து 50, கிருஷ்ணகிரியிலிருந்து 20, தருமபுரியிலிருந்து 30, மற்ற வழித்தடங்களிலிருந்து 62 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 682 பேருந்துகள் இயக்கப்படும். 

24-ம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 125, காஞ்சிபுரத்திலிருந்து 20, புதுச்சேரியிலிருந்து 20, பெங்களூரிலிருந்து 20, வேலூரிலிருந்து 55, திருச்சியிலிருந்து 50, சேலத்திலிருந்து 50, ஓசூரிலிருந்து 50, கிருஷ்ணகிரியிலிருந்து 20, தருமபுரியிலிருந்து 30, மற்ற வழித்தடங்களிலிருந்து 62 என மொத்தம் 502 சிறப்புப் பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும். 

பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், பேருந்து இயக்கத்தை கண்காணிக்கவும் தேவையான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.