105 வயதில் கொரோனாவை வென்று பிரமிக்க வைத்துள்ள கேரள பாட்டி…

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 94  வயதான தாமஸ் என்பவரும், 88 வயதான அவரது மனைவி மேரியம்மாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, விரைவில் குணம் அடைந்தனர்.

அதே கேரள மாநிலத்தில் 105 வயது பாட்டி கொரோனாவில் இருந்து மீண்டு, மருத்துவ அதிசயத்தை  நிகழ்த்தியுள்ளார்.

அங்குள்ள கொல்லம் மருத்துவமனையில் கடந்த 20 ஆம் தேதி 105 வயது மூதாட்டி ஒருவர் மூச்சுத்திணறல் மற்றும் சளி தொந்தரவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவரை கண்காணிக்கத் தனிக் குழுவே அமைக்கப்பட்டது. தீவிர சிகிச்சை மற்றும் உடல் வலிமை காரணமாக ஒரு வாரத்தில் அவர் குணம் அடைந்தார்.

நேற்று ( புதன்கிழமை) அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.கொரோனா இல்லை என இந்த சோதனையிலும் தெரிய வந்ததால், அவர் ‘டிஸ்சார்ஜ்’’ செய்யப்பட்டார்.

’’கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவரும் போது விபரீத முடிவு எடுப்போர், இந்த 105 வயது பெண்ணிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்கிறார்,  பாட்டிக்குச் சிகிச்சை அளித்த கொல்லம் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஹபீப் நாசிம்.

இந்த பாட்டிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா,’’ கொரோனாவில் இருந்து மீண்ட இந்த மூதாட்டி, மருத்துவ அதிசயம்’’ என்று வர்ணித்துள்ளார்.

 -பா.பாரதி.