மும்பை: மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் 104 வேட்பாளர்கள் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பட்டியலில் முன்னாள் முதல்வர்களான அஷோக் சவான் மற்றும் பிரித்விராஜ் சாவன் ஆகியோருடன், மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப் தோராத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக தொடர்புடைய வட்டாரங்கள் உறுதிசெய்கின்றன.
மராட்டிய சட்டசபைக்கான மொத்த இடங்களான 288 என்பதில், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 இடங்களில் போட்டியிடுகின்றன. எஞ்சிய 38 இடங்களை இதர சிறிய கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்துள்ளன. சமாஜ்வாதி கட்சி, ராஜு ஷெட்டியின் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவையே அந்த சிறிய கட்சிகள்.
அதேசமயம், வஞ்சித் பகுஜன் அகாதி என்ற கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்திவிட்டது. சரத்பவாரின் கட்சியுடன் வைத்துள்ள நீண்டகால கூட்டணியை காங்கிரஸ் முறிக்க வேண்டுமென்ற நிபந்தனையை அந்த கட்சி விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் சார்பில், அதன் சட்டமன்ற கட்சித் தலைவர் கேசி பதாவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் விஜய் நாம்தேவ்ராவ் ஆகியோரின் பெயர்களும் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், சுஷில்குமார் ஷிண்டே, சஞ்சய் நிருபம், மிலிந்த் தியோரா மற்றும் நானா படோலி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை.