பட்டி தொட்டி எங்கும் துவம்சம் செய்த “மச்சான பாத்தீங்களா..”
=====================================================
 

யல், இசை, நாடகம் என தமிழுக்கு சிறப்பு சேர்த்த அறிஞர்கள் தமிழகத்தில் ஏராளம். திரை இசையை பொருத்தவரை மொழிபேதம் இல்லாமல் பலர் தமிழுக்கும், தமிழ் இசைக்கும் பெருமை சேர்த்திருக்கின்றனர். குறிப்பாக திரைப்பட பாடகிகள். பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், எல்.ஆர். ஈஸ்வரி, சித்ரா… இவர்கள் எல்லோருமே மக்கள் மனதில் நின்றவர்கள். அவர்களில் ஒருவரான எஸ்.ஜானகி மூத்த கலைஞராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

 

எஸ்.ஜானகி பற்றியும் அவரது அரிய சாதனைகள், சுவரஸ்யான சம்பவங்கள், அரிய நிகழ்வுகள் பற்றியும் விரிவாக பார்ப்பதற்கு முன் தேனினும் இனிமையான, குழலினும் சுகமான, அமுதினும் அமுதான குரலில் எஸ்.ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கன பாடல்களில் சில பாடல்களைமுதலில் சுவைப்போம் வாருங்கள்..
1957ம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு படத்தில், ’பெண் என் ஆசை பாழானது ஏனோ?’ என்ற பாடல்தான் கானக்குயில் எஸ்.ஜானகியின் முதல் பாடல். பாடிய பாடல் என்னவோ நெகடிவ் சென்டிமென்ட் பாடல் ஆனால் ஜானகியின் பாடல் ஆசை போதும் போதும் என்ற அளவிற்கு அவர் வாழ்வில் நிரம்பியது.
1962ம் ஆண்டு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் கு.மா.பாலசுரமணியம் எழுதிய ’சிங்கார வேலனே தேவா..’ என்ற பாடலை ஜானகியின் குரலில் கேட்டதும் மனதுக்குள் ஒரு அமைதி பிறக்கும். ’கொஞ்சும் சலங்கை’ படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. ஆபேரி ராகத்தில் இப்பாடல் அமைக்கப்பட்டது. முறைப்படி கர்நாடக இசையை கற்றதால் எல்லா ராகங்களும் அவரது நாவின் நுனியில் தாண்டவ மாடியது.
சிறுவயதில் பாடல் ஞானத்துடன் இருந்த எஸ்.ஜானகி நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் முறைப்படி இசை கற்றுத் தேர்ந்தார். தெலுங்கு பிராமணர் குடும்பத்தில் பிறந்த ஜானகி ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி, சத்யவதி ஆகியோருக்கு மகளாக 1938ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பிறந்தார்.
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்த எஸ்.ஜானகி ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து திரைப்பட துறையில் நுழைந்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி 1957 ஆண்டு அவர், ’விதியின் விளையாடு’ படத்தில் பாடிய வுடனே மறுநாளே தெலுங்கு படத்தில் பாட வாய்ப்பு வந்தது. ’எம்.எல்.ஏ’ என்ற படத்தில் கண்டசாலாவுடன் ’நீயாசா அடியா..’ என்ற பாடல் பாடினார். அதன்பிறகு எஸ்.ஜானகி யின் கொடி உயர பறக்கத் தொடங்கியது. தொடர்ந்து 25 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொங்கினி, துளு, சவுராஷ்டிரம், வங்களம், சமஸ்கிரதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடினார்.
கணவர் ராம் பிரசாத் மறைந்த நிலையில் தற்போது மகன் முரளி கிருஷ்ணாவுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். சென்னை மற்றும் சொந்த ஊரிலும் அவர் அவ்வப்போது சென்று வசிக்கிறார். அவருக்கு தற்போது 82 வயது ஆகிறது.
எஸ்.ஜானகி இதுவரை 4 முறை தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். அது பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். அவர் பாடிய பல பாடல்கள் கல்லின் மேல் எழுத்தாக பதிந்தி ருக்கிறது. அதில் சிலவற்றை பார்த்தாலே அவரின் பெருமை என்ன என்பது தெரிய வரும்.
 

கவிஞர் கண்ணதாசன் எழுதிய, ’பூஜைக்கு வந்த மலரே வா..’ பாடலை எம்.எஸ்.விஸ்வ நாதன் டி.கே.ராமமூர்த்தி இசையில் ’பாத காணிக்கை’ படத்திற்காக 1962ம் ஆண்டு பாடினார். அதே ஆண்டு ’சுமைதாங்கி’ பி.பி.ஸ்ரீனிவாஸுடன் ’எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன..’, ’ஆலயமணி’ படத்தில், ‘தூக்கம் உன் கண்களை. ’போலீஸ் காரன் மகள்’ படத்தில், ’இந்த மன்றத்தில் ஓடிவரும்..’ ஆகிய பாடல்களை பாடினார். இவையெல்லாவற்றுக்கும் எம்.எஸ்.வி, டி.கே.ராமமூர்த்தி இரட்டையர்கள்தான் இசை அமைப்பாளர்கள். பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
1963ம் ஆண்டு ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் உடன் இணைந்து ’அழகுக்கும் மலருக்கும்..’ பாடலை பாடினார். இந்த பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.
1965ம் ஆண்டு ’திருவிளையாடல்’ படத்தில் ’பொதிகை மலை உச்சியிலே..’ பாடலை பி.பி.ஸ்ரீனிவாஸுடன் இணைந்தும், 1969ம் ஆண்டு ’அடிமைப்பெண்’ படத்தில், ’காலத்தை வென்றவன்’ பாடலுக்கு பி.சுசீலா வுடனும் இணைந்தும் எஸ்.ஜானகி பாடினார். இப்பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.
1970ல் ’என் அண்ணன்’ படத்தில், ’நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்’ பாடலை டி.எம்.சவுந்திரராஜனுடன் இணைந்து பாடினார். ’எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் எம் எஸ் வி இசையில், ’வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக’ பாடலை தனித்துப் பாடினார். இப்பாடல்களில் இசை அமைப் பாளர், பாடகர்கள் மாறினாலும் பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்தான் .
1973ம் ஆண்டு, ’பொண்ணுக்கு தங்க மனசு’ படத்தில், ‘தஞ்சாவூர் சீமையிலே..’ பாடலை முத்துலிங்கம் எழுத பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பாடினர். ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத் தார்.
1974ம் ஆண்டு, ’அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் எழுதிய, ’கண்ணிலே என்னவுண்டு’ பாடல் பாடிய ஜானகி.

 
1976ம் ஆண்டு ’அன்னக்கிளி’ படத்தில் இளையாராஜா இசை அமைத்த முதல் படத்தில் ’மச்சான பாத்தீங்களா..’ என்ற பாடிய பாடல் பட்டி தொட்டி எங்கும் துவம்சம் செய்து வெளுத்து வாங்கியது. பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதினார்.
1976ம் ஆண்டு ’உறவாடும் நெஞ்சம்’ படத்தில், ’ஒரு நாள் உன்னோடு..’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடினார். இளையாராஜா இசை அமைத்தார். அடுத்து, ’அவர்கள்’ படத்தில் மீண்டும் எம்.எஸ்.வி இசைக்கு, ’காற்றுக்கென்ன வேலி’ பாடலுக்கு குரல் கொடுத்தார். கண்ணதாசன் பாடல் எழுதினார்.

1977ம் ஆண்டு, ’கவிக்குயில்’ படத்தில் இளையராஜா இசையில், ’குயிலே கவிக் குயிலே ..’ பாடல் பாடினார். 1978ல் ’அச்சாணி’ படத்தில் கவிஞர் வாலி எழுதிய ’மாதா உன் கோயிலில்..’ பாடிய ஜானகி மீண்டும் வாலி எழுத்தில் அதே ஆண்டில் ’சிகப்பு ரோஜாக்கள்’ ’நினைவோ ஒரு பறவை..’ பாடலை கமலுடன் இணைந்தும் பாடினார். இப்பாடலுக்கு இசை அமைத்ததும் இளையராஜாதான். மீண்டும் 1978ல் இளையராஜா இசையில் ’பிரியா’ படத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுதிய, ’ஏ பாடல் ஒன்று ராகம்..’ பாடலை கே.ஜே.யேசு தாஸுடன் இணைந்து பாடினார்.

1979ம் ஆண்டு ’தர்மயுத்தம்’ படத்தில் ’ஆகாய கங்கை பாடலை..’ மலேசியா வாசுதேவன் உடன் பாட எம்.ஜி.வல்லபன் பாடலை எழுதியிருந்தார்.
பாட்டுபாடினோமா அத்தோடு வேலை முடிந்தது என்றிருப்பவர் அல்ல எஸ்.ஜானகி வயது வித்தியாசம் இல்லாமல் ஆரம்ப பாடகிகள் பாடினாலும் எனக்கு தந்த தேசிய விருதை அவருக்கு தந்திருக்கலாமே என்று வெள்ளந்தியாக பேசும் ஜானகியின் பரந்த மனதை நாளை பார்க்கலாம்.
பாகம் 1 முடிவு……