சென்னை

தமிழகத்தில் காவல்துறையில் 10000 பேரைத் தேர்வு செய்ய உள்ளதால் இளைஞர்கள் தயாராக இருக்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிர், உடைமைக்குப் பாதுகாப்பு அளித்தல் உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது.  குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களைத் தடுக்கவும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதே வேளையில் தமிழக காவல் துறையில் காவலர் பற்றாக்குறையும், இதனால் கூடுதல் பணிச்சுமையும் தொடர்ந்து இருந்து வருகிறது. இதையொட்டி கடந்த 2021 ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழக காவல் துறைக்கு 1 லட்சத்து 33,138 காவலர்களை பணி அமர்த்த அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆனால், 1 லட்சத்து 18,881பேர் மட்டுமே பணியில் இருந்தனர்.  இதையொட்டி தேர்வு செய்யப்பட்ட 10391 பேருக்கு அடுத்த மாதம் முதல் பயிற்சி தொடங்குகிறது.  இன்னும் சுமார் 10,000 பேருக்கு மேல் பற்றாக்குறை உள்ளது.

எனவே தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள் என சுமார்10 ஆயிரம் பேரைப் புதிதாகத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.  மேலும் சுமார் 450 காவல் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆகவே, வேலை தேடும் இளைஞர்கள், ஆர்வம் உள்ள தகுதி வாய்ந்த பட்டதாரிகள் கொரோனாஊரடங்கு காலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி, காவலர் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று  காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.