சென்னை:  சென்னை மாநகராட்சி  மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை மாமன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்ற  மாதாந்திர  கூட்டத்தில் 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்  கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 9ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து  இன்று கூடிய இரண்டாவது மாமன்ற கூட்டம்  மாநகராட்சி மேயர்  பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக  மாமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். இன்றைய கூட்டம் நேரமில்லா நேரம் இல்லாத கூட்டமாக நடைபெற்றது.

மேயர்  பிரியா தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், துணை மேயர் மகேஸ்குமார், ஆணையாளர் (பொ) எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., ககன்தீப்சிங் பேடி மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்தகூட்டத்தில்  100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பழுதடைந்த பொதுக் கழிப்பிடங்களை இடிப்பதற்கான தீர்மானம்,

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கண்காட்சி அமைப்பதற்கான செலவினங்கள்,

பள்ளிகளில் பாலியல் குழுக்கள் அமைப்பதற்கும்,

தொண்டு நிறுவனங்கள் மூலமாக 32 சென்னை மழலையர் பள்ளிகளுக்கு உபகரணங்கள் நிறுவி பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு செட் சீருடைகளைக் கொள்முதல் செய்யவும்,

சென்னை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இளைஞர் பாராளுமன்றம் என்ற அமைப்பை உருவாக்கிச் செயல்படுத்தவும்

சென்னைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அவசர செலவு நிதி வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டச் சேமிப்பு நிதியிலிருந்து 44 காம்பாக்டர் வாகனங்கள், 30 இலகுரக காம்பாக்டர் வாகனங்கள் ரோபோட்டிக் மல்டி பர்ப்பஸ் எக்ஸ்வேட்டர் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் இடித்து புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்குப் பணியேற்பு கடிதங்கள் வழங்குவதற்கான அனுமதி கோரும் தீர்மானம்,

அடையாறு ஆற்றங்கரையில் மரங்கள் நட்டு இரண்டு ஆண்டுகள் பராமரிக்கும் பணிக்கு அனுமதி வழங்கும் தீர்மானமும் நிறைவேறியது.

இத்துடன் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நவீனமயமாக்கப்பட்ட ஒளிரும் சீருடையைக் கொள்முதல் செய்வதற்கு நிர்வாக அனுமதி கோரும் தீர்மானமும்,

சொத்துவரி பொது சீராய்விற்கான அறிவிப்பினை சொத்து உரிமையாளர்களுக்குத் தபால் துறை மூலம் விநியோகம் செய்ய பணியாணை வழங்கியதற்கும் அதற்கான செலவினத்திற்கும் அனுமதி கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து,  சென்னை மாநகராட்சி பணியிலிருந்து குறிப்பிட்ட அலுவலர்கள் வயது முதிர்வு ஓய்வு மற்றும் தன் விருப்ப ஓய்வில் செல்வதற்கும் சென்றதற்கும் குறிப்பிட்ட அளவில் பணிக்காலத்தைப் பணி வரன்முறை மற்றும் தகுதி காண் பருவம் முடித்தவராக அறிவிக்கத் தீர்மானம் நிறைவேறியது.

,அரசாணையின்படி முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுக் காலமான பணியாளருக்கு 25 லட்சம் வழங்க அனுமதி அளிக்கும் தீர்மானம் ,

தியாகராய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான நிறுத்த கட்டடத்தை உயர்தர வாகனம் நிறுத்த கட்டணமாக உயர்த்த தீர்மானம் நிறைவேறியது.

செனாய் நகர் அம்மா அரங்கம் கலை அரங்கத்தில் வருவாயைப் பெருக்க மற்ற நிகழ்ச்சிகளுடன் குடும்ப நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கும் வாடகை நிர்ணயம் செய்யத் தீர்மானம் என மொத்தம் 100 தீர்மானங்கள் நிறைவேறியது.