சென்னை:

சென்னையில் இன்று நடந்த வன்முறை சம்பவங்களில் 100 போலீசார் காயமடைந்தனர்.

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வந்த போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்தது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களும் தாக்குதலுக்கு தப்பவில்லை. சென்னை கீழ்ப்பாக்கம் தாசப்பிரகாஷ் பகுதியில் போலீஸ் இணை ஆணையர் சந்தோஷ் குமார் கார் எரிக்கப்பட்டது.

பல பகுதிகளில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு, கல்வீச்சுகளில் கூடுதல் ஆணையர் ஸ்ரீதர், துணை ஆணையர்கள் சரவணன், ஜெயக்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் உள்ளிட்ட 100 போலீசார் காயமடைந்தனர்.

ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். 10 போலீசாருக்கு மண்டை உடைந்து. ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் நடத்திய தடியடி பிரயோகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் காயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.