சென்னை: தியேட்டர்களில் பொங்கல் முதல் 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கிய நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 100% இந்த விவகாரத்தில் தமிழகஅரசு மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில், தமிழக திரையரங்குகளில், பொங்கலுக்கு 100 சதவிகித இருக்கைகளும் பயன்படுத்திக்கொள்ள தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் உள்பட பல தரப்பினர் அரசின் உத்தரவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசும் தமிழகஅரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஜனவரி 11ம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க வழங்கப்பட்ட அனுமதி தொடரும் என்றும், 100 சதவிகிதம் அனுமதி வழங்கிய விவகாரத்தை தமிழகஅரசு சரியான முறையில் மறுபரிசீலனை செய்து முடிவெடுக்கும் என நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.