டெல்லி: தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ.2 ஆயிரத்து 999 கோடி நிதிய மத்திய அரசு விடுவித்தது. நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்த நிலையில், அதில் மாதி அளவு தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (MGNREGS) படி, நாடு முழுவதும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை கட்டிக்காக்கும் வகையில் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது கிராமப்புற மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்கியது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, அதற்கான குறைந்த பட்ச சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 100நாள் வேலை திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. உயர்நீதிமன்றமும் இதை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தது. இதனால் இந்த திட்டத்திற்கான நிதியை வழங்குவதில் மத்தியஅரசு தாமதம் செய்து வந்து. இதனால், இந்த திட்டத்தில் , பணியாற்றிய பலருக்கு சம்பளம் கொடுக்கப்ப முடியாத நிலை உருவானது.
இதையடுத்து, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 100நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் முதல், ஊதியம் வழங்கப்படாதது பயனாளிகளுக்கும், மாநில அரசுக்கும் கவலை அளிக்கும் விஷயமாக இருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் எடுத்துச் சென்றார்.
“கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பும் இரத்தமும்” என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடங்கிய 100 நாள் வேலை திட்டத்தை “இரக்கமற்ற” பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மூட முயற்சிக்கிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு ரூ.2 ஆயிரத்து 999 கோடி நிதியை விடுவித்துள்ளதாக அறிவித்துள்ளது. முந்தைய ஆண்டின் மொத்த நிலுவைத் தொகை சுமார் ரூ.3 ஆயிரத்து 170 கோடி. அனுமதிக்கப்பட்ட ரூ.2 ஆயிரத்து 851 கோடியில், பட்டியலினர், பழங்குடியினர் மற்றும் பிற பயனாளிகள் முறையே ரூ.740 கோடி, ரூ .43 கோடி மற்றும் ரூ.2 ஆயிரத்து 68 கோடி பெறுவார்கள் என்று மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் இயக்குநர் சஞ்சய் குமார் சமீபத்தில் மத்திய அமைச்சகத்தின் ஊதியம் மற்றும் கணக்கு அதிகாரிக்கு அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் நகல் தமிழக அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 29% தொழிலாளர்கள் SC/ST குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் இதன்மூலம் பயனடைகின்றனர்.