புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது சக மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது. இதனால், தொற்று பாதிப்பபு மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், திறக்கப்பட்டிருந்த சில கல்வி நிறுவனங்களிலும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. சமீபத்தில் குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்பட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, தொடர்ந்து காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப மையத்தின் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதுரு. இன்று புவனேஸ்வரில் உள்ள ஐஐடி மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதுகுறித்து புவனேஸ்வர் ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிக்கப்பட்ட 10 மாணவர்களும் ஐ.ஐ.டி.யில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் வைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள் அடங்கிய அடுத்த குழுவின் வருகை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், நாடு முழுவதிலும் இருந்து ஐ.ஐ.டி.க்கு திரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பின்னர் 15 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலிலும் மாணவர்கள் வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.