டில்லி:
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டதிருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதாக மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் சார்பாக அரசாணை வெளியிட்டு உள்ளது.
இந்த 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில், சமத்துவத்துக்கான இளைஞர் அமைப்பு சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பபட்டது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதியரசர் சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதி மன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசினார். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 10 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக, ஏற்கனவே உள்ள 50 சதவிகித தீர்ப்பை மீறி இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.
அதைத்தொடர்ந்து இதுகுறித்து மத்திய அரசு மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.