சென்னை:

 பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

பொருளாதார ரீதியாக பின் தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. இதையடுத்து, நடப்பு ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் வலியுறுத்தி உள்ளது.

இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சட்டமன்றத்திலும் இது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது,   அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியவர், இதுதொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையடுத்து,  அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் உறுதி அளித்த நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல்  கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும்  தலைவர்களின் கருத்துகள் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

இதைத்தொடர்ந்து 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.