மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஐஸ்வால் நகரில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, கல் குவாரி இடிந்து விழுந்தது.
சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் , மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர்.
மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் தீவிரமாக செயல்பட்டு இதுவரை 2 தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளனர். இன்று காலை முதல் அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் சுரங்கம் சரிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மிசோரம் மாநிலம் ஐஸ்வால் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள மெல்தம் மற்றும் ஹ்லிமென் இடையே அமைந்துள்ள சுரங்கத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுரங்கம் சரிந்தபோது, தொழிலாளர்கள் தப்பிக்க முயன்றனர், ஆனால் அனைவரும் வெளியேற முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் NDRF மற்றும் நிர்வாகத்தின் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கன மழை காரணமாக மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் இயங்கி வந்த சுரங்கத்தின் உரிமையாளரை கைது செய்யக் கோரி சுரங்க விபத்தில் சிக்கியவர்கள் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டு போராட்டம் நடத்தியதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்கு மழை இடையூறாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹன்தாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-6 இல் ஏற்பட்ட நிலச்சரிவால் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து ஐஸ்வால் துண்டிக்கப்பட்டுள்ளது.