அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

நியூ ஆர்லியன்ஸின் பிரெஞ்சு குவாட்டரில் உள்ள போர்பன் தெருவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் போலீசார் உள்ளிட்ட சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

அதி வேகமாக வந்த ஒரு வெள்ளை நிற டிரக் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தின் இடையே அவர்களை வேண்டுமென்றே மோதி தள்ளி சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் தகவலில், கூட்டத்தின் மீது வண்டியை ஏற்றிய அந்த வாகனத்தின் ஓட்டுநர் பின்னர் அதிலிருந்து எகிறி குதித்து காவல்துறையினரை நோக்கி சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் போலீசார் சிலர் காயமடைந்ததாகவும் அவர்கள் திருப்பி சுட்டதில் ஓட்டுநர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் மீது வாகனத்தை ஏற்றி கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.