டெல்லி: 10.5% வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் அனைத்து மனுதாரர்களுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஏற்கனவே சில மனுதாரர்களின் மனுவுக்கு எதிராக மட்டும் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது ஒருங்கிணைந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இது தேர்தல் கூட்டணிக்கான முடிவு என்று விமர்சிக்கப்பட்டது. மேலும், வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து, உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பல அமைப்புகள் சார்பில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? என கேள்வி எழுப்பியதுடன், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது என கூறி வன்னியா் சமூகத்தினருக்கான உள்இடஒதுக்கீடு செல்லாது என தீா்ப்பளித்தனா்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் பல அமைப்புகளும் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த நிலையில், 10.5% வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் அனைத்து மனுதாரர்களுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒருங்கிணைந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது மேல்முறையீடு செய்துள்ளது.