டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் தினசரி 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. மேலும் கும்பமேளா பண்டிகை யின்போது மேலும் தொற்று பரவலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  இதையடுத்து, அங்கு கொரோனா நெறிமுறைகளை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் மாநில பாஜக அரசுக்கு கடிதம் மூலம் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.  குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், மத்தியபிரதேசம் மாநிலங்களில் இருந்து 83 சதவிகித பாதிப்புகள் இருப்பதாகவும், தமிழகம் உள்பட சில மாநிலங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளா இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது இதையொட்டி, அங்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே ஏராளமான சாதுக்கள் அங்கு குவிந்து வருவதால், தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது

முன்னதாக, த்திய சுகதாாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் மருத்துவர் சுஜித் குமார் சிங் தலைமையிலான மருத்துவர்கள் குழு கடந்த 16 மற்றும் 17-ம் தேதிகளில் உத்தரகாண்ட் மாநிலத்துக்குச் சென்று கும்பமேளா நடக்கும் ஹரித்துவார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் மாநில பாஜக அரசின் தலைமைச்செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இப்போதே, ஹரித்வார் வரும் யாத்ரிகர்களில்  10 முதல் 20 பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.  இது கும்பமேளா நாட்களில் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. இதனால், உள்ளூர் மக்களும்  தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால்,  “மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், பக்தர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு புகட்ட வேண்டும், அதற்காகப் பல்வேறு இடங்களில் கெபரோனா விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துதல் வேண்டும் என்றும்,  கும்பமேளா நடைபெறும்  நாட்களில், ஏராளமான மருத்துவக்குழுக்களை நியமித்து, அடிக்கடி கொரோனா சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா பரவல் அதிகமாக இருந்தால், மக்களிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.