சென்னை:
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி 1 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பா.ம.க., பெண் பிரமுகர் ஆக்னஸ் கைது செய்யப்பட்டார்.
சென்னை, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆக்னஸ். பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பட்டினம்பாக்கம் கடற்கரை ரோட்டில் ஆசிரியை ஒருவரிடம் பைக்கில் வந்த இருவர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டபோது, ரோடு ஓரம் உள்ள கல்லில் மோதி ஆசிரியை உயிழிந்தது அனைவரும் அறிந்ததே.
இதை காரணமாக சொல்லி, பட்டினம் பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றகோரி, அந்த பகுதி பெண்களை திரட்டி, போராட்டத்தை தூண்டி, டிவிக்களில் முதன்மையாக வந்து பரபரப்பு பேட்டி கொடுத்து பிரபலமானவர் ஆக்னஸ்.
இவர் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு, டிபாசிட் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன் டிரைவர் பரணி பிரசாத் என்பவருடன் சேர்ந்து, துரைப்பாக்கம், கண்ணகி நகரில் உள்ள குடிசை மாற்று வாரியம் மற்றும் பட்டினப்பாக்கம் சுனாமி குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகக் கூறி, பலரிடம் பணம் வசூலித்துள்ளார். சுமார் 1 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த மோசடி குறித்து, சில மாதங்களுக்கு முன், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிக்குமார், மந்தைவெளியைச் சேர்ந்த பார்வதி உட்பட, 100க்கும் மேற்பட்டோர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, ஆக்னஸ் மற்றும் பரணி பிரசாத்தை கைது செய்தனர். ஆக்னசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.