சபரிமலை:
சபரிமலைலில் கடந்த 2 நாள்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற சபரிமலை அயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 17ந்தேதி முதல் மண்டல பூஜையையொட்டி 41நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த நிலையில், இந்த ஆண்டு அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்ப பெற்றதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினசரி ஒருலட்சம் பக்தர்கள் தரிசனம் பெற்று வருகிறார்கள். பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்காலிக அனுமதிக்காக பல பகுதிகளில் தேவசம் போர்டு சார்பில் பதிவு அலுவலகமும் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நேரடியாக வரும் பக்தர்களின் வசதிக்கான உடனடி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கோவிலுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பக்தர்கள் குறைந்த பட்சம் 5மணி நேரம் முதல் அதிக பட்சம் 10மணி நேரம் வரை காத்திருந்து அய்யப்பனை தரிசிக்கும் நிலை உள்ளது. இதையடுத்து தரிசன நேரத்தில் கூடும் ஒருமணி நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மண்டல பூஜை தொடங்கிய நாள் முதல் நேற்று வரை, 3 லட்சத்து 84 ஆயிரத்து 106 பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளனர். வருகிற 30-ந் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. உடனடி முன்பதிவையும் சேர்த்தால் நவம்பர் மாத இறுதிக்குள் 10 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சபரிமலைலில் கடந்த 2 நாள்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.