புதுடெல்லி: கொரோனாவை முன்னிட்டு, சுமார் 1.28 கோடி பேர், அதன் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பாலிசிகளை எடுத்துள்ளதாக காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா பாலிசிகள் விற்பனை மூலம், பிரீமியம் வசூல் ரூ.1,000 கோடியைத் தாண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலதிகமாக கூறப்பட்டுள்ளதாவது, “கொரோனாவுக்காகவே, ‘கொரோனா கவச் மற்றும் கொரோனா ரக்‌ஷக்’ என இரண்டு சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கொரோனா கவச் பாலிசியை மொத்தம் 42 லட்சம் பேரும்; கொரோனா ரக்‌ஷக் பாலிசியை மொத்தம் 5.36 லட்சம் பேரும் எடுத்துள்ளனர்.

கொரோனா பாதுகாப்பை உள்ளடக்கிய பிற பாலிசிகளையும் சேர்த்து, மொத்தம் 1.28 கோடி பேர் பாலிசிகளை எடுத்துள்ளனர். காப்பீட்டு தரகர்கள் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நிலை நகரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், பொருளாதார வளர்ச்சி இந்தப் பகுதிகளில் இருந்துதான் அதிகம் வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.