டில்லி:

இந்தியாவில் கடந்த அக்டோபரில் 1.04 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர். ஒரு மாதத்தில் அதிகம் பேர் விமான பயணம் செய்த பட்டியலில் இது இரண்டாவது முறையாக இடம் பிடித்துள்ளது. சாதனை அளவாக இந்த வருடம் மே மாதம் 1.1 கோடி பேர்உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.

2016ம் ஆண்டு அக்டோபரில் 86.7 லட்சம் பேர் பயணம் செய்தனர். இது இந்த ஆண்டு 20.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல், கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 9.5 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 8.1 கோடி பேர் பயணம் செய்திருந்தனர்.

இது குறித்து டிக்கெட் முன்பதிவு இணையதள நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘பண்டிகை காலகட்டத்தில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கட்டண குறைப்பு, புதிய வழிகளில் விமானம் இயக்குதல் உள்ளிட்ட சில காரணங்களால் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட பிறப்பு காலத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்’’ என்றார்.

அக்டோபரில் உள்நாட்டு விமானங்களில் 1.04 கோடி பேர் பயணம் செய்துள்ள நிலையில், இண்டிகோ விமானங்களில் 39.5 சதவீதம் பேரும், ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் 17.2 சதவீதம் பேரும், ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியாவில் 13.1 சதவீதம் பேரும், கோ ஏர் விமானங்களில் 8.8 சதவீதம் பேரும், டாடா ஜேவி ஏர்லைன்சில் 7.8 சதவீதம் பேரும் பயணம் செய்துள்ளனர்.