சென்னை
வரும் 1 ஆம் தேதி வரை தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கி கடும் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக சேலம், ஈரோடு உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக உள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும் கந்தக பூமியாக மாறியுள்ளது.தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாக வெயில் கடுமையாக உள்ளது.
கத்தரி வெயில் தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதைகாண முடிகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 1 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
அதாவது, வட உள்மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் (9 பாரன்ஹீட்) வரை வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 1 ஆம் தேதி வரை மேற்சொன்ன மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த இடங்களில் காலை 8 மணியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் உயர்ந்து பிற்பகல் 2 மணியளவில் வெயில் உக்கிரமாக இருக்கும். சில இடங்களில் அதிகபட்சமாக 108 டிகிரி வரையும், அதனைத் தாண்டியும் வெப்பம் பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.