சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகத்தில் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை- செய்யப்பட உள்ளதாக, தமிழ்நாடு இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இன்று காலை திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளத. இதற்காக காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
அரசு உத்தரவின்படி, விநாயகர் சிலைகள் 3 அடி, 5 அடி, 10 அடி உயரங்களில் வைக்கப்படுகிறது. இதுதவிர, தனிப்பட்ட முறையில் வீடுகளில் 15 லட்சம் மக்கள் சிறிய விநாயகர் சிலைகள் வைக்கிறார்கள். விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கும் அனுமதி பெறப்பட்டுஉளளது.
திருப்பூரில் 4-வது நாளும், கோவையில் 5-வது நாளும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்படுகிறது. திருப்பூர், கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்றார். இந்த ஆண்டும் எழுச்சியோடு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து பேசியவர், தமிழ்நாடு அரசு நடத்திய முருகன் மாநாட்டில் கலந்துகொள்ள எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியவர், நாளை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்க வேண்டும். அவர் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக ஏற்கனவே முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறினார்.
விநாயகர் சிலை வைக்க அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை தெரிவித்து தடை போடுகிறார்கள். தடை போட போட இந்து மக்கள் எழுச்சி பெற்று வருகிறார்கள். இந்த அரசு மீது இந்து மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
சிலர், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை வசூலிப்பதில் பிரச்சனை செய்வதாக இந்து முன்னணி மீது தவறான தகவலை பரப்புகிறார்கள். எங்களுக்கு கெட்ட பெயர் உருவாக்குவதற்காக சிலர் செயல்படுகிறார்கள். நன்கொடை வசூல் பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். விநாயகர் சதுர்த்திக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.