சென்னை: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981ல் இருந்து 10,978ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, தமிழகத்தில் 74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 179 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 115 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இன்று மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 16,25,326 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.30 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 90% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 – 18 வயதுடைய 22.50 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.