சென்னை:

சென்னையில் 02/06/2020 கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3ஆயிரம் எட்டும் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் நேற்று 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதியானதைத் தொடர்ந்து மொத்தம் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதன்படி, சென்னையில் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக கடந்த 15 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்த மே 18ம் தேதி வரை சென்னையில் மொத்தம் 7117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சென்னையில் 500க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மே 31ம் தேதி 803 பேருக்கும், நேற்று 964 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.  தொடர்ந்து ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை 2,935 ஆக அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,867 பேரும், திரு.வி.க. நகரில் 1,651 பேரும், தேனாம்பேட்டையில் 1,770 பேரும், தொண்டியார்பேட்டையில் 1,839 பேரும் மற்றும் அண்ணா நகரில் 1341 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 15770 ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.