“இளம் வழக்கறிஞர்கள், குறிப்பாக சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினர், அபரிமிதமான திறனைக் கொண்டுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இளம் வழக்கறிஞர்களை ஆதரிப்பதில் வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான முயற்சிகள் மேற்கொள்வதன் மூலமே முன்னேற முடியும்” என்று உயர்நீதிமன்ற தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் வக்கீல்கள் நல நிதி முறையாக வழங்கப்படவில்லை என ஃபரிதா பேகம் என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று வந்தது.
சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவைச் சேர்ந்த பல இளம் வழக்கறிஞர்கள் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக வழக்கறிஞர் தொழிலை விட்டு வெளியேறுகின்றனர். மேலும் பொருளாதார காரணங்களால் அவர்களின் உற்சாகம் தடைபடுவதோடு பல சவால்களை அவர்கள் எதிர்கொள்வதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து, தொழில்ரீதியாக ஜூனியராக பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு குறைந்தபட்ச மாத உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பணிபுரியும் ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு குறைந்தபட்ச மாத உதவித்தொகை ₹20,000 மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் குறைந்தபட்சம் ₹15,000 வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் ஜூனியர்களின் பாலின அடிப்படையில் ஊதியத்த்ல எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், வேறு தொழில்களில் உள்ள ஜுனியர்களும் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் வழக்கறிஞர்கள் குறித்து மட்டும் நீதிமன்றம் கவலைப்படுவது ஏன் என்று சிலர் கேள்வியெழுப்ப முடியும் என்று கூறிய நீதிபதி சுப்பிரமணியம், “நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் வழக்கறிஞர்களாக இருப்பதே இதற்கு காரணம்” என்றார்.
நாம் விரும்பும் மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்குவோம், மூத்த வழக்கறிஞர்கள் பல சிரமங்களை கடந்து வந்திருப்பதால் இளையவர்களுக்கு அதேபோன்ற துன்பங்களுக்கு ஆளாக வேண்டும் என்று நினைப்பது தவறு.
வருங்கால வழக்கறிஞர்கள் நாம் சந்தித்த அதே சிரமங்களை ஏன் அனுபவிக்க வேண்டும் ? அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் உறுதியான சூழலை உருவாக்குவதில் நாம் ஒன்றிணைய வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.