ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் பெயரை தொடர்புபடுத்தியவர்கள் மீது ₹100 கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை 10 ஆண்டுகள் கழித்து முன்னேற்றமடைந்துள்ளது.
2014ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கு விசாரணையைத் தொடர விருப்பம் தெரிவித்து தோனி தரப்பு வழக்கறிஞர் பி.ஆர். ராமன் சமர்ப்பித்த பிரமாண பத்திரம் மீது சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 2013ம் ஆண்டு ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவற்றின் பெயர் அடிபட்டது.
இதைத் தொடர்ந்து தோனி மீதான அவதூறு குறித்து ஜீ மீடியா கார்ப்பரேஷன், பத்திரிகையாளர் சுதிர் சவுத்ரி, ஓய்வுபெற்ற இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரி ஜி. சம்பத் குமார் மற்றும் நியூஸ் நேஷன் நெட்வொர்க் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கு பல்வேறு நிலையில் நிலுவையில் இருந்து வந்தது.
வழக்கில் தொடர்புடைய ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத் குமார் இதற்கு முன் நடைபெற்ற விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தோனி தரப்பில் அவர் மீது தொடரப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில் அவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு விதித்த தண்டனையை 2024ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை வழக்கறிஞர் ஆணையராக நியமித்து விசாரணை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வீரருமான தோனி மிகப்பெரிய பிரபலமாக இருப்பதாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும் வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றம் வருவதில் சிக்கல் இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்பட்டது.
இதையடுத்து, தோனி மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களின் வசதிக்கு ஏற்ற இடத்தில் வழக்கறிஞர் ஆணையர் விசாரணையை மேற்கொள்வார் என்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன் கூறியுள்ளார்.
மேலும், அக்டோபர் 20, 2025 முதல் டிசம்பர் 10, 2025 வரை விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு தயாராக இருப்பதாக தோனி தெரிவித்துள்ளதை அடுத்து விசாரணைக்கான தேதி மற்றும் இந்த வழக்கை விசாரிக்க உள்ள வழக்கறிஞர் ஆணையர் யார் என்ற விவரம் விரைவில் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது.