தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சங்கத்தில் எழுநூறுக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருக்கிறார்கள். சண்டை காட்சிகளை வடிவமைப்பது, நடிகர்களுக்கு சண்டைப் பயிற்சி அளிப்பது, கதாநாயர்களுக்கு டூப்பாக ரிஸ்க்கான காட்சிகளில் நடிப்பது போன்ற பணிகளை செய்கிறார்கள்.
சண்டை காட்சிகளின் போதும், கார், மோட்டார் சைக்கிளில் போன்ற வாகனங்களில் வேகமாக செல்வது போன்ற காட்சிகளின் போதும் விபத்து ஏற்பட்டு பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிலர் உடலுறுப்புகளையும் இழந்துள்ளார்கள்.
இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில் பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் கனல் கண்ணன், ஜாக்குவார் தங்கம், தளபதி தினேஷ், தியாகராஜன், சூப்பர் சுப்பராயன், அனல் அரசு, சந்திரசேகர், குன்றத்தூர் பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பொதுக் குழுவில் ஸ்டண்ட் நடிகர்களுக்கும், ஸ்டண்ட் இயக்குனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
“கயிறு கட்டி சண்டை போடும் காட்சிகளில் நடிக்க தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக சம்பளம் வாங்கித் தர வேண்டும்” என்று ஸ்டண்ட் நடிகர்கள் வற்புறுத்தினர். கனல் கண்ணன் சங்கத்தில் இல்லாதவர்களை வைத்து சண்டை காட்சி எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
பதிலுக்கு, தங்களுக்குத் தெரியாமல் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் சண்டை காட்சியை படமாக்கியதாக ஸ்டண்ட் இயக்குநர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
“உயிரை பணயம் வைத்து ஸ்டண்ட் நடிகர்கள் நடிக்கிறார்கள். அவர்களது வயிற்றில் அடிக்கலாமா” என்ற ஆதங்கக்குரல் கோடம்பாக்கத்தில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. மாஸ் ஹீரோக்களாக உலாவரும் பலருக்கு டூப் போடுபவர்கள் இவர்கள்தான். தங்கள் உயிரை பணயம் வைத்து, ஹீரோக்களின் இமேஜை உயர்த்துபவர்கள்.
இவர்களது பிரச்சினையை தீர்க்க எந்த ஹீரோ வரப்போகிறார் என்பதே கோடம்பாக்க தொழிலாளிகளின் கேள்வி.