ஒ பி  ஜைஷா
ஒ பி ஜைஷா

திருவனந்தபுரம்:
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் தடகள வீராங்கணை ஷூ, ஆடை வாங்க பணம் இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலை நிலவுகிறது. கேரளா மாநிலத்தில் வடக்கு மலை பகுதியில் உள்ள  வயநாடு மாவட்டம் காலபேட்டா பகுதியை சேர்ந்தவர் ஓ.பி.ஜெயிஷா. ஒரு காலத்தில் இவர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் எவ்வித பயிற்சியும் இன்றி வெறுங்காலுடன் ஓடி சாதனை படைத்தார். 15 ஆண்டுகள் கழித்து இவர் தற்போது புதிய சாதனைகளை படைக்க கூடியவராக திகழ்கிறார். ஆனால், இதற்கு இவரது வறுமை தடையாக இருக்கிறது.
இவரது 5  வயதிலேயே இவரது தந்தை ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகிவிட்டார். இதை நினைத்து இவரது தாயும் கவலையில் ஆழ்ந்துவிட்டார். ஜெயிஷாவுக்கு இரு சகோதரிகள். பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் போது வீட்டில் உணவு இருந்தால் அவர்களுக்கு அது அதிசய நிகழ்வாகும். வேலைக்கு செல்லவும் தாய் அனுமதிக்கவில்லை. வீட்டை அடகு வைத்து இரு மாடுகளை வாங்கி பிழைப்பு நடத்தி வந்தனர். உள்ளூர் ஓட்டப் பந்தயங்கள் மூலம் இவருக்கு ஒரு சிறந்த எதிர்காலம் கிடைக்க தொடங்கியது. அதே பகுதியை சேர்ந்த ஒரு பயிற்சியாளர் இவரை பற்றி அறிந்து இவருக்கு கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். கல்லூரியில் உன்னிக்கிருஷ்ணன் என்ற பயிற்சியாளர் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் ஜெயிஷாவுக்கு முதன் முதலாக ஒரு ஜோடி ஷூ வாங்கி கொடுத்தார்.
அதன் பிறகு அவர் பெற்ற பயிற்சியை தொடர்ந்து, எதிவும் அவருக்கு பின்னடைவு ஏற்படவில்லை. தொடர் வெற்றிகள் மூலம் பல பயிற்சியாளர்களிடம் அறிமுகமானார். 21 வயதாகும் ஜெயிஷா டோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெங்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் கிடத்த பணத்தை கொண்டும், வீட்டை விற்றும், கடன் வாங்கியும் சகோதரிகளின் திருமணத்தை முடித்தார். இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தகுதி இவரிடம் உள்ளது. ஆனால் இவரது குடும்பம் இன்னும் வறுமையில் வாடுகிறது.
அதோடு காமன் வெல்த் போட்டிகள், ஆசிய தடகள போட்டிகளில் இவரால் வெற்றி பெற முடியாமல் போனது. இதனால் இவரது திறன் முடிந்துவிட்டது என்று மீடியாக்கள் கூறின. ஆனால், தற்போது தனது கணவர் குர்மீத் சிங் உந்துதல் காரணமாக ஜெயிஷா மீண்டும் ஓடு களத்திற்கு வந்துவிட்டார். தனது வேலையை விட்டுவிட்டு ஜெயிஷாவுக்கு ஆதரவாக குர்மீத் சிங்கும் களம இறங்கிவிட்டார். பல போட்டிகளில் பங்கேற்று இவரது முந்தைய சாதனைகளை இவரே உடைத்தார்.
ஜே.எஸ்.டபிள்யூ மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் இவருக்கான போக்குவரத்து மற்றும் உணவு செலவை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளன. அரசு ரூ. 5 லட்சம் கொடுத்தது. சிறிய அளவிலான சொந்த வீட்டில் குடியேறிவிட்டார். ஆனாலும் இவரது கடன் அதிகளவில் உள்ளது. தற்போது ஷூ, ஆடைகள் உள்ளிட்ட அடிப்படை விளையாட்டு பொருட்களை இவரது சொந்த செலவில் தான் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய சாதனைகளை படைக்க இருக்கும் ஜெயிஷா, ஷூ மற்றும் ஆடைகள் கூட வாங்க ஸ்பான்சர் கிடைக்காமல் அவதிப்படுகிறார். இவர் தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார். ஒலிம்பிக்கு முந்தைய போட்டிகளில் பங்கேற்க அமெரிக்கா செல்ல காத்திருக்கிறார். அங்கு 7 டிகிரி செல்சியசில் இவர் பயிற்சி பெற வேண்டியிருக்கும். அதற்கு ஏற்ற குளிர் தாங்கும் ஆடைகள் இவரிடம் இல்லை. அதனால் ஜெயிஷாவுக்கு உதவ நல் உள்ளங்கள் முன் வந்து ஒலிம்பிக் நாயகியை உருவாக்கி நாட்டிற்கு பெரும் சேர்க்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.