savings
வெளிநாட்டில் பதுக்கிவைக்கப் பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் பணம் விநியோகிக்கப் பட்டு, ஏழை மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவோம் எனப் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது மோடியின் தலைமையிலான பா.ஜ.க. அரசு.
ஆனால் தற்பொழுது ஏழைகள் குருவி சேர்ப்பது போல் சேர்த்தப் பணத்திற்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதன் விவரம் பின்வருமாறு:
பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம், மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ளீர்களா ? தங்களுக்கு ஒரு அதிர்ச்சியை மத்திய அரசு பரிசளித்துள்ளது.
வங்கிகளின் சிறுசேமிப்புத் திட்டங்களின் மீதான  வட்டிவிகிதம் குறித்து நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிற்கும் நிதியமைச்சகம் கூடி முடிவினை அறிவிப்பது என்று மத்திய அரசு புதிய முடிவெடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம்ராஜன் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் இருவரும் அரசின் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதம் அதிகமாக உள்ளதால், மற்ற சந்தைகளின் வட்டிவிகிதம் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும், எனவே சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதம் மட்டுப்படுத்தப்பட வேண்டுமெனச் சிபாரிசு செய்திருந்தினர்.
ஏற்கனவே முதல்கட்டமாகப் பிப்ரவரி 13ம் தேதி, குறுகிய கால சிறுசேமிப்புகளுக்கு வட்டி 0.25 சதவிகிதம் குறைக்கப்படுவதாகத் தடாலடியாக அறிவித்தது. அப்போது மூத்த குடிமக்கள், பெண்குழந்தை திட்டங்களில் மாற்றம் இருக்காது எனத் தெரிவித்து இருந்தது. ஆனால் இதற்கு மாறாக, இரண்டாம் கட்டமாகப் பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டியைக் குறைத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு தற்போது சர்ச்சைகுள்ளானதற்கு காரணம், சந்தை வட்டிவிகிதத்திற்கு சமமாக்கும் விதமாக, மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுசேமிப்பு வட்டிவிகிதத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாற்றத்தைக் கீழுள்ள அட்டவணையில் காணலாம்:
PPF1
இது அறிவிப்பு இவ்வாண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை அமலில் இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் பிபிஎஃப் மட்டும் தான் தனியார் நிறுவனங்களில் வேலைப்பார்க்கும் சாதாரண மனிதர்களின் எதிர்காலத்திற்கான சேமிப்பு. தற்பொழுது இதன் வட்டிவிகிதத்தை 8.7 சதவிகி‌த்திலிருந்து 8.1 சதவிகிதமாகக் குறைத்து அறிவித்துள்ளதன் மூலம் ஏழைகளின் வயிற்றில் அடித்துள்ளது.
மேலும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் இரண்டாவது வருவாயாக இருந்து வருபவை, தபால் நிலையம் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களான செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்து அதில் கிடைத்த வட்டி தான். அதிகபட்சமாகக் கிசான் விகாஸ் பத்திரத்திற்கான வட்டிவிகிதம் 8.7 சதவிகிதத்திலிருந்து 7.8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது நடுத்தர வருவாய்ப் பிரிவினர் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும்.
இதேப் போன்று தேசிய சேமிப்புப் பத்திரமான என்எஸ்சி-யின் வட்டியும் 8.5 சதவிகிதத்திலிருந்து 8.1 சதவிகிதமாகவும், செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு வட்டி 9.2 சதவிகிதத்திலிருந்து 8.6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கீழுள்ள அட்டவணை ஒருவர் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் எவ்வளவு ரூபாய் இழக்கப் போகின்றார் என்பதைக் காட்டுகின்றது:
PPF2
இது ஒருபுறமிருக்க, இந்த வட்டிவிகிதமும்  மக்களுக்கு பெரிதாய் எந்தப் பயனும் அளிக்கப்போவதில்லை என்றும் விமர்சிக்கப் படுகின்றது. பலரும் தங்கள் விரக்தியினை சமூகவவலைத் தலங்களில் பகிர்ந்துக் கொள்கின்றனர்.
குறிப்பாக,  இந்தியாவின் சராசரி பணவீக்கம் 6%; பாதுகாப்பான முதலீட்டின் வட்டி விகிதம் 8.1%. இதன் பொருள், நமக்குக் கிடைக்கும் வட்டியில் 6 சதவிகிதம் விலைவாசி உயர்வோடு சரிகட்டப்பட்ட்து போக மிச்சமிருப்பது 2.1%. இது எத்தகைய விளைவைச் சமுதாயத்தில் ஏற்படுத்துமெனில், மக்களின் கவனம் சிறுசேமிப்பிலிருந்து சிதறடிக்கப்பட்டு, கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் ஏமாற்றுத்திட்டங்களில் சேர ஈர்க்கப்படும். சேமிப்பு செலவினமாக மாற்றப்படும். ஏமாறப்போவது ஏழைகள்தானெனத் தமது பதிவின் மூலம் எச்சரிக்கின்றார் நரேன் ராஜகோபாலன்.
ரூபாய் ஒரு லட்சம் பி பி எஃப் சேமிப்பு வைத்துள்ளவர் பத்து வருடங்களில் ரூபாய் 31,055 இழக்கப் போகின்றார். ரூபாய் ஒரு லட்சம் கிசான் விகாஸ் சேமிப்பு வைத்துள்ளவர் பத்து வருடங்களில் ரூபாய் 36,336 இழக்கப் போகின்றார்.
இந்த அறிவிப்பைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், மோடி அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் எல்லாம் ஏழைமக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துவதாவே உள்ளது. இரண்டே ஆண்டுகளுக்குள் மோடியின் அரசு மக்கள் விரோத அரசு என்பதை நிரூபித்திவிட்டது எனவும், இதனைத் திரும்பப் பெற வலியுறுத்திக் காங்கிரஸ் குரல் கொடுக்குமெனக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜுங்ஜுங்வாலா தெரிவித்துள்ளார்.
ஆறுதலாக,  அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு ஏற்கனவெ வழங்கப்பட்டு வந்த குறைந்தப்பட்ச வட்டியான 4 சதவீதம் வட்டி தொடர்ந்து வழங்கப்படும் என பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளதை வரவேற்போம்.